Wednesday, October 27, 2010

தழும்புகளாய் !!


உன்னை எண்ணி
வாழ்ந்த காலம்,

கண்கள் ரெண்டும்
ஈரமாக..

காதல் ஒன்றும்
காயமல்ல ,

காலப்போக்கில்
ஆறி போக..

நெஞ்சம் எல்லாம்
வாழுதே
தழும்புகளாய் !!

Friday, September 17, 2010

பெயரெனப்படுவது யாதெனில்...


அவன்
கோபால கிருஷ்ணமூர்த்தி.
பள்ளியில் வருகைப் பதிவின்போதேஇவ்விதம் விளிக்கப்படுவான்.
மற்றபடி நண்பர்களுக்கு
கோபால்.

வீட்டிலோ கிட்டா.
மாணிக்கபுரம் மாமா வீட்டில்
இன்னொரு கிட்டா இருந்ததால்
அங்கு மட்டும் மூர்த்தி.
கல்லூரி மலர்களில்
கவிதை எழுதிய நாட்களில்
அவன் தனக்குத்தானே இட்டுக்கொண்டது
அபிராமிதாசன்.
அலுவலகம் சென்று
மாதச் சம்பளக்காரனாய் உழன்ற காலத்தில்
கடுவன் பூனை என்றழைத்தனர்
சக ஊழியர்கள்.
தவிர,
ஹரிகிருஷ்ணன் அப்பா
பெருசு
சாவுகிராக்கி
செவிட்டுக் கிழம் என்றெல்லாம்
காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப
அழைக்கப்பட்டவன்
ஒரு மழை நாளில்
மரணித்துப்போனான்
வீட்டு வாசலில் காத்திருந்த
உறவினர் கேட்டார்
'பாடி எப்ப வருதாம்?'

- ஆர்.எஸ்.பாலமுருகன்

Thursday, August 5, 2010

ஜனனம் !!



தாயாக
நீ என்
தலை கோத
வந்தால் ,

உன் மடி மீது
மீண்டும்
ஜனனம்
வேண்டும் ..

Wednesday, August 4, 2010

தன்னிலை மறந்த ...




கூந்தலில்
நுழைந்த
கைகள்
ஒரு கோலம்
போடுதோ...

தன்னிலை
மறந்த
பெண்மை
அதைத்
தாங்காதோ...

Thursday, July 22, 2010

முகிலினங்கள்...



முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!!

Tuesday, July 6, 2010

அச்சம் தவிர்...



அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
தாழ்ந்து நடவேல்
ஏறுபோல் நட
மானம் போற்று
ரௌத்திரம் பழகு
நையப் புடை
தெய்வம் நீ என்றுணர்..!!

சர்வம் சிவம் !


அன்பு சிவமென்றால்,
அன்பினால் பெற்ற இன்பம்
சிவமாவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம் ;
சிற்றின்பம் சிறிய சிவம்

-ஜெயகாந்தன்

-

Thursday, June 17, 2010

உந்தன் ஆடை காயப்போடும்....



உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான் ..
தவம் பண்ணினேன் ...!!

Wednesday, June 16, 2010

நானாக கூடாதா ?? ...





எந்த பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் ...
கண்ணை மூடிக் கொண்டாலும்
மறையாதே ...

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும் ..
அன்பே அதை உன் கண்கள்
அறியாதா?

என்றோ யாரோ உன் கையை தொடுவான் ..
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் ..
அன்பே அது நானாக கூடாதா ?? ...

Tuesday, June 8, 2010

அடிமை சாசனம்....




எந்தன் படுக்கை அறைக்கு
உந்தன் பேரை வைக்கவோ ..

அடிமை சாசனம்
எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்...
ஆயுள் வரையில்
உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்...!!!

Monday, June 7, 2010

நித்யானந்தாவும் .. என் மனைவியும் ...




நித்யானந்தாவை
நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துபோனது...
என்றாவது ஒரு நாள்
என் நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைபடத்தை காட்டி கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனை போல்
நம் எல்லோராலும் ஏமாற்றபட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று...

- முத்து ரூபா

Friday, May 28, 2010

சாகா முத்தங்கள் ..



உன் முத்தத்துக்கும்
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்துவிட வேண்டும்
என்றேன்..
சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்...!!

-மதன்

Wednesday, May 26, 2010

காதலியின் பெயரை முன்வைத்து ..




ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்

ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்

தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்

மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்

காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்

எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?

- ஜெனோவா

Sunday, May 23, 2010

இதில் என்ன பாவம்?


மனிதர்கள் சிலநேரம்
நிறம் மாறலாம்..

மனங்களும்
அவர் குணங்களும்
தடம் மாறலாம்...

இலக்கணம்
சில நேரம்
பிழையாகலாம்...

எழுதிய
அன்பு இலக்கியம்
தவறாகலாம்...


விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு..

நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு..

இதில் என்ன பாவம்?
எதற்கிந்த சோகம்?

Friday, May 21, 2010

எந்த நிழலில்...




எத்தனை நாள் ,
எத்தனை நாள்
இப்படி நான்
வாழ்ந்திருப்பேன் ..?

நீயுமில்லை
என்று சொன்னால்
எந்த நிழலில்
ஓய்வெடுப்பேன் ?..

Tuesday, May 11, 2010

ஏழ ..





எட்டுக்காணி போனா..
அட எவனும் ஏழ இல்ல ...
மானம் மட்டும் போனா - நீ
மய்க்கா நாளே ஏழ ..

Tuesday, May 4, 2010

எம் பொழப்பு ..!




ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சி போவது போல் ,
நீ கிழிச்ச கோட்டு வழி ,
நீளுதடி எம் பொழப்பு ...!!

- ராவணன்

Friday, April 30, 2010

கடைசி மீனும்...



கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்...
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது
என்று நமக்கு உறைக்கும்

வெவ்வேறு வாசம் ...




ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்

வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு
யாம் கண்டனம்

Saturday, April 3, 2010

உன் மார்போடு....




உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் ..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை ...
அதை தாண்டி ஒன்றுமே இல்லை ...

Thursday, April 1, 2010

இவள் யாரோ ??




அழகான நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்டிட
மனம் துடிக்கும்..

இவள் யாரோ,
என்ன பேரோ ...

Monday, March 29, 2010

உண்மையான வரிகள் ...




எல்லாரும்
நாம எல்லார மாதிரி
இருக்க கூடாதுன்னு
தான் நினைக்கிறாங்க ...

ஆனா எல்லாரும்
எல்லார மாதிரி தான்
இருக்காங்க!!!


- ஆனந்த் . (School Friend)
PS: தெளிவா இருக்கும் போதே

Thursday, March 18, 2010

பறவையின் சத்தம்!




வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
கி(ரீ)ச் கி(ரீ)ச் சத்தம்!


- நாவிஷ் செந்தில்குமார்

Saturday, February 20, 2010

கண்டதும் நொடியிலே!




கோயிலின்
வாசலில்
உன் செருப்பை
தேடுவேன் !

கண்டதும்
நொடியிலே
பக்தனாகுவேன் !!

Monday, February 15, 2010

பழங்கனவாய் !!






மரத்திலே உறங்குகையில்
விழுகின்ற பயமின்னும்,

பழங்கனவாய் வருகிறது
மரபணுவில் பதிவுற்று ......

- கமல் ஹாசன்

Friday, February 12, 2010





ஏன் உன்னை
பார்த்தேன் என்றே
உள்ளம்
கேள்வி கேட்கும்...

ஆனாலும்
நெஞ்சம் அந்த
நேரத்தை
நேசிக்கும்....



Sunday, February 7, 2010

ஒரு வயலின் தாருங்கள் !!




அவள் அழகை
என்னால்,
வார்த்தைகளால்
வர்ணிக்க
முடியாது...

ஒரு வயலின்
தாருங்கள் ,
வாசித்து
காட்டுகிறேன் !!

Sunday, January 31, 2010

நண்பன்..




டவுனுக்குப் போகலாமென்றிருந்தது
பொரித்த புரோட்டாக்களைச்
சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்
கலைந்த கேசமும் வெறித்த கண்களுமென
ஆடைகளற்றுத் தேமேவென
சாயா கேட்டுக்கொண்டிருந்தான்
பால்ய காலத்து நண்பன் கனகசுப்ரமணி
பயங் கலந்தபடி அவ்வப்போது
என்னைப் பார்த்துக்கொண்டே
முகம் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
சில ரூபாய் தாள்களைத் திணித்துவிட்டு
ஏதும் செய்ய இயலாதபடிக்கு நகர்ந்துவிட்டேன்
பெருங்குரலெடுத்து ஓலமிட்டான் நண்பன்
உலகத் துன்பத்தின் ஒட்டுமொத்தக் குரலாக
அது இருந்தது!

- பாக்கியம் சங்கர்.
Flickr Link

Monday, January 25, 2010

பெண்கள் மிரண்டால்..




பெண்கள்
மிரண்டால்
கட்டில்
கொள்ளாது...

சுக்காக
உடைந்துவிடும்
தேக்கு ...

Flickr Link

உந்தன் மடி...




பெண்ணே உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும் !!

Tuesday, January 19, 2010

தமிலை முடிச்சுட்டேன்!'




'ழ' 'ல'வாக
வழுக்கிப்போனது.
'ற' 'ர'ணமாகி
நாராசமானது.
சுழிகளே இல்லாத
'ண'க்கள் பல்லில் தெறித்து
உதடு வழி உதிர்ந்தன.
'அனிச்ச'த்தை மெள்ள மெள்ள
'மொப்பக் குலைத்து'
தேர்வுக்குப் படித்த மகள்
கடைவாயில் தமிழ் ரத்தம்
ஒழுகக் கத்தினாள்
'அம்மா!
தமிலை முடிச்சுட்டேன்!'
அப்படித்தான்பட்டது
எனக்கும்!


-
ப.உமாமகேஸ்வரி

Friday, January 15, 2010

தேவதைகள்..




ஏன் இப்படி என்றேன்
ஏன் கூடாது என்றாள்
இந் நிலவொளியில் என் மடிகிடந்து
கதைப்பாயா என்று கேட்டேன்
அடக்க மாட்டாமல் சிரித்தவள்
நீ கவிஞனா எனக் கேட்டாள்
இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்றேன்
பிடிச்சிருக்கு என்றாள்
மேலும் கேட்கத் தோணாமல்
அவள் மடி புதைந்தேன்
என்னை ஆற்றுப்படுத்தியவள்
சிரித்தபடியே இருந்தாள்
தேவதைகள் அவ்வப்போது
காட்சியளித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!

- பாக்கியம் சங்கர்.

பேதம்..



வினோத் பொறுப்பில்
வருகைப் பதிவேடு.
கரும்பலகையும்
சாக்பீஸ், டஸ்டரும்
கதிரவனிடம்.
பிரம்பைப் பாதுகாக்க
பிரபு.
விளக்குமாறு
மட்டும்
விஜயலட்சுமியிடம்!

- நாணற்காடன்

Flickr Link


Sunday, January 10, 2010

உனக்கு நான் ..




நீ விளையாட்டு
பிள்ளை!

உனக்கு நான்
தலையாட்டும்
பொம்மை!!

Saturday, January 9, 2010

திருமணம் செய்!!




சேர்ந்து சுற்று
ஒன்றாய் வாழ்
அலுக்க, அலுக்க
புணர்ந்து மகிழ்
அவள் வலி உணர்
பிணக்கு கொள்
ஊடல் கொண்டாடு
கூடல் செய்
முரண்பட்டு நில்
கோபம் கொள்
நிஜ முகம் காட்டு

இத்தனையும் மீறி
இருவரிடமும்
காதல் மிச்சம் இருந்தால்

திருமணம் செய்!!



- Cable சங்கர்

Link

பெண் வாசம் !!




ஒரு
பூ வாசமே
உன் மேல்
இது நாள் மட்டுமே
கண்டேன்...

அது
பெண் வாசமாய்
மாற
அதை நான்
சுவாசமாய்
கொண்டேன் !!

Flickr Link

Saturday, January 2, 2010

சாளரம்



ஆணியில்
மாட்டியிருக்கும் சட்டை
அசையும்போதெல்லாம்
அப்பாவுக்குத் தெரியாமல்
எடுத்த பத்து ரூபாயும்
தம்பி போட்டுக்கொண்டுபோய்
இங்க் கரையோடு
வந்த ஏப்ரல் ஒண்ணும்
மழையன்று தாவணிக்கு
மேலே போட்டுக்கொண்ட
தங்கை நினைவையும்
சேர்த்தே அசைத்துவிட்டுப்
போகிறது காற்று.
மேன்ஷன்களில்
சாளரங்கள்
வைத்தவனை
என்ன செய்யலாம்?

- நர்சிம்


Flickr Link