Friday, September 17, 2010

பெயரெனப்படுவது யாதெனில்...


அவன்
கோபால கிருஷ்ணமூர்த்தி.
பள்ளியில் வருகைப் பதிவின்போதேஇவ்விதம் விளிக்கப்படுவான்.
மற்றபடி நண்பர்களுக்கு
கோபால்.

வீட்டிலோ கிட்டா.
மாணிக்கபுரம் மாமா வீட்டில்
இன்னொரு கிட்டா இருந்ததால்
அங்கு மட்டும் மூர்த்தி.
கல்லூரி மலர்களில்
கவிதை எழுதிய நாட்களில்
அவன் தனக்குத்தானே இட்டுக்கொண்டது
அபிராமிதாசன்.
அலுவலகம் சென்று
மாதச் சம்பளக்காரனாய் உழன்ற காலத்தில்
கடுவன் பூனை என்றழைத்தனர்
சக ஊழியர்கள்.
தவிர,
ஹரிகிருஷ்ணன் அப்பா
பெருசு
சாவுகிராக்கி
செவிட்டுக் கிழம் என்றெல்லாம்
காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப
அழைக்கப்பட்டவன்
ஒரு மழை நாளில்
மரணித்துப்போனான்
வீட்டு வாசலில் காத்திருந்த
உறவினர் கேட்டார்
'பாடி எப்ப வருதாம்?'

- ஆர்.எஸ்.பாலமுருகன்