Monday, April 4, 2011

மரணத்தின் முன் ஏற்பாடுகள்



ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்

அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்

தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்

பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்

'எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி

எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்

தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க...
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!

- ஆர்.எஸ்.பாலமுருகன்

1x.com Link

3 comments:

Madhavan said...

Amazing !! Amzzing

Kapalee said...

Amazingly simple, but realistic scene! Well written. Congrats

Unknown said...

வலிகள் மிகுந்த வரிகள்..... வாழ்த்துகள்.....